Total Pageviews

Tuesday, November 11, 2008

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?
கடவுள் இருக்கிறார்

கடவுள் எங்கே இருக்கிறார்?
கடவுள் எல்லாவிடத்திலும் எல்லா பொருளிலும் இருக்கிறார்.
ஏன் உன் உள்ளேயும் இருக்கிறார் என் உள்ளேயும் இருக்கிறார்

என் உள்ளே என்றால்?
உன் உடலின் உள்ளே உள்ளத்தில் குடி கொண்டு உன்னை இயக்குகின்றார்
அதனால்தான் உள்ளமே கோயில் ஊனுடம்பே ஆலயம் என்று
சித்தர்கள் பாடி வைத்துள்ளனர்.உள்ளம் என்னும்
கோயிலில் தெய்வம் குடியிருந்து நம்மை ஆட்டி வைக்கிறது.

அதை என் நாம் உணரவில்லை?
அதற்க்கு முயற்சி செய்யவில்லை
முயற்சி செய்யாமல் எந்த செயலும் வெற்றி பெறுவதில்லை.

அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
கடமாகிய இந்த உடலை கடந்து உள்ளே செல்ல வேண்டும்

எப்படி உள்ளே செல்வது?
விழித்திருக்கும் நேரமெல்லாம் மனம் வெளியிலேயே
சென்று கொண்டிருக்கிறது
அதை உட்புறமாக திருப்ப வேண்டும்

எப்படி திருப்புவது ?
அதற்க்கு இரண்டு பற்றுகளை விட்டுவிடவேண்டும்
அவைகளை விட்டுவிட்டால் மனம் உட்புறம் தானாகவே திரும்பிவிடும்

அந்த இரண்டும் என்ன?
ஒன்று தான் என்னும் அகப்பற்று

மற்றொன்று?
எனது என்னும் புறப்பற்று

நான் என்றால் என்ன?
நான் என்னும் எண்ணம் தான் எல்லா துன்பங்களுக்கும் மூலகாரணம்

எப்படி?
நம்மையும் எல்லாவற்றையும் படைத்து காத்து,அழிக்க வேண்டிய நேரத்தில் அழித்து,மறைத்து மீண்டும் படைப்பவர் கடவுள். படைப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து இயக்குபவரும் அவரே. உண்மை இவ்வாறிருக்கையில் தான் எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக்கொண்டு கடவுளை மறந்து ஆணவம் கொண்டு செயல்படுவதே நான் என்னும் எண்ணமாகும் .அந்த எண்ணத்தை கைவிடும்வரை கடவுளை உணரவும் முடியாது ,காணவும் முடியாது.
அதே போன்று இந்த உலகில் நமக்கு சொந்தம் என்று எதுவுமில்லை. இறைவன் கொடுத்த இந்த உடலும் அழிந்துவிடும் .இந்த உலகில் இருக்கும் வரை நாம் அனைத்தையும் நமக்கு தேவைப்பட்ட அளவிற்கு பயன்படுத்தி கொள்ளலாமே தவிர அவைகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.எனவே இந்த இரண்டு பற்றுகளையும் அடியோடு விட்டோழித்தால்தான் நாம் கடவுளை காணமுடியும்.உள்ளத்தில் பற்றுகள் இருந்தால் மனம் அதிலேயேதான் லயித்திருக்கும்.பற்றுகளை கொண்ட மனத்தினால் அவைகளை விட்டுவிட்டு உள்ளத்தில் உள்ளே ஒளி வீசி கொண்டிருக்கும் கடவுளை நினைக்க கூட முடியாது. நினைக்ககூட முடியாத ஒன்றை நாம் எவ்வாறு காணுவது?

இந்த இரண்டு பற்றுகளை விட்டொழித்த பின்னர் புதிதாக இரண்டு பற்றுகளை நாம் ஏற்படுத்திகொள்ளவேண்டும்

என்ன?
ஒன்று பக்தி மற்றொன்று நம்பிக்கை
கடவுளுக்கு ஈடாக எதையும் கருதாமல்
கடவுளை அடைவதே தலையாய குறிக்கோளாக
கொண்டு செயல்படவேண்டும்
இரண்டாவது மனதில் சிறிது கூட
சஞ்சலமில்லாமல்,உறுதியான சிந்தனையுடன்
எந்தவிதமான குறுக்கீடுகள் வந்தாலும் அவைகளை
கண்டு முயற்சிகளை கை விடாமல் கடவுளை காண
முயற்சி செய்ய வேண்டும்.
இவைகளை கடைபிடித்தால்
ஒவ்வொருவரும் தன் உள்ளத்திலே கடவுளைகாணலாம்.
உள்ளத்தில் கடவுளை கண்டவர்கள்
அனைவரின் உள்ளத்திலேயும்
கடவுள் வீற்றிருப்பதை காணலாம்.
கண்டு ஆனந்தித்து துன்பமில்லா வாழ்வை இவ்வுலகத்திலும்
முடிவில் பிறப்பு ,இறப்பற்ற பேரானந்த நிலையினை அடையலாம்.

No comments: